அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் - எடப்பாடி பழனிசாமி அதிரடி

'அதிமுகவில் இருந்து என்னை நீக்கினால் மகிழ்ச்சிதான்’ என்று நேற்று செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.
சேலம்,
நேற்று நடைபெற்ற முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ‘அதிமுகவில் இருந்து என்னை நீக்கினால் மகிழ்ச்சிதான்’ என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில், சேலத்தில் முக்கிய நிர்வாகிகளை இன்று எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து, அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
”அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன், எம்.எல்.ஏ., (கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்ததற்காக அவரை கட்சி பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி விடுவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.






