அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் செங்கோட்டையன் மரியாதை

த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
சென்னை,
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வீட்டுக்கு நேற்று மாலை நேரில் சென்ற செங்கோட்டையன், விஜய்யை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து சென்னை பனையூரில் இன்று நடைபெற்ற நிகழ்வில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன். திருப்பூர் முன்னாள் எம்பி சத்யபாமா உள்பட செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர்.
இந்தநிலையில், த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் சென்று செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சத்தியபாமா ஆகியோரும் மரியாதை செலுத்தினர். எம்.ஜி.ஆரின் சுயசரிதையான நான் ஏன் பிறந்தேன் என்ற புத்தகத்தை விஜய்க்கு செங்கோட்டையன் பரிசளித்திருந்தார்.






