த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன்: எடப்பாடி பழனிசாமி மீது பா.ஜ.க. மேலிடம் அதிருப்தி

முதலில், செந்தில் பாலாஜி வெளியேறி தி.மு.க.வில் இணைந்தபோதே அ.தி.மு.க.வின் செல்வாக்கு கொங்கு மண்டலத்தில் சரியத் தொடங்கியது.
சென்னை,
அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்து வந்த நிலையில், கட்சியை விட்டு நீக்கப்பட்டதால், நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் சென்று இணைந்துள்ளார்.
அ.தி.மு.க.வுக்கு கொங்கு மண்டலத்தில்தான் செல்வாக்கு அதிகம் இருந்து வந்தது. முதலில், செந்தில் பாலாஜி வெளியேறி தி.மு.க.வில் இணைந்தபோதே அ.தி.மு.க.வின் செல்வாக்கு கொங்கு மண்டலத்தில் சரியத் தொடங்கியது. தற்போது, கே.ஏ.செங்கோட்டையனும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது, மேலும் அ.தி.மு.க.வின் செல்வாக்கு சரியும் என்று கூறப்படுகிறது. 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்த போதே, கட்சியை பலப்படுத்த முயற்சி மேற்கொண்டது. அதாவது, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுத்தது.
ஆனால், எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருந்ததால், அது நடக்காமல் போய்விட்டது. தற்போது, செங்கோட்டையனும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டபோதே, அவர் தி.மு.க. அல்லது த.வெ.க.வில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் ரகசியமாக டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. உடனே, பா.ஜ.க. தலைமை எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு, அதிருப்தியாளர்களை அரவணைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அவர் சமரசத்துக்கு சம்மதிக்காமல் முரண்டு பிடித்ததால், தற்போது செங்கோட்டையனும் மாற்று கட்சிக்கு சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. இது, எடப்பாடி பழனிசாமி மீது பா.ஜ.க. தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, மத்தியில் ஆளும் பா.ஜ.க.வையும், மாநிலத்தில் ஆளும் தி.மு.க.வையும் விஜய் விமர்சித்து வருகிறார். அதனால், பா.ஜ.க. கூட்டணியை விட்டு அ.தி.மு.க. வெளியே வந்தால், தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கும் என்று அரசல் புரசலாக பேச்சு இருந்தது. ஆனால், தற்போது செங்கோட்டையனே அங்கு சென்று இணைந்திருப்பதால், இனி அதற்கும் வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
இதுபோன்ற, எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமான முடிவுகள் அ.தி.மு.க.வுக்கு தொடர்ச்சியான பின்னடைவை ஏற்படுத்தி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஏற்கனவே, விஜய் தான் பேசும் கூட்டங்களில் எல்லாம், தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி என்று கூறிவருகிறார். அந்த நிலைமை உண்மையிலேயே உருவாகி விடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் அரசியல் எதிர்காலத்தை இது பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.






