செங்கோட்டை- தாம்பரம் ரெயிலை தினசரி இயக்க வேண்டும்: மத்திய மந்திரிக்கு நெல்லை எம்.பி. மனு

நெல்லை, தென்காசி, விருதுநகர், காரைக்குடி உள்ளிட்ட தென் தமிழ்நாட்டின் 11-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு இந்த ரெயில் செல்கிறது.
நெல்லை,
வாரம் மும்முறை இயக்கப்படும் செங்கோட்டை- தாம்பரம் ரெயிலை தினசரி இயக்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிக்கு நெல்லை தொகுதி எம்.பி. ராபர்ட் புரூஸ் மனு அனுப்பினார். இதுகுறித்து அவர் மத்திய ரெயில்வே மந்திரி, ரெயில்வே வாரிய தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
செங்கோட்டை-தாம்பரம் இடையே வாரம் மும்முறை இயக்கப்படும் அதிவிரைவு ரெயிலை (20684/ 20683) தினசரி இயக்க வேண்டும். இந்த ரெயில் தினமும் 120 சதவீதத்துக்கும் அதிகமான பயணிகளை ஏற்றி செல்கிறது. எனவே இந்த ெரயிலின் தினசரி சேவை மிகவும் அவசியமானதாகும். நெல்லை, தென்காசி, விருதுநகர், காரைக்குடி உள்ளிட்ட தென் தமிழ்நாட்டின் 11-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு இந்த ரெயில் செல்கிறது.
இந்த ரெயில் தமிழ்நாட்டின் மேற்கு பகுதியை மாநில தலைநகருடன் டெல்டா பகுதிகளை உள்ளடக்கி இணைக்கும் ஒரே நேரடி இரவுநேர சேவையாகும். எனவே செங்கோட்டை- தாம்பரம் அதிவிரைவு ரெயிலை தினசரி சேவையாக மாற்றுவதற்கு உரிய நிர்வாக அனுமதி மற்றும் நிதி அனுமதி விரைந்து வழங்கிட வேண்டும்
அதேபோல் நெல்லை-ஷிமோகா சிறப்பு ரெயிலை (தடம் எண் 06103/06194) மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும். இந்த ரெயில் எப்போதும் முழுமையான பயணிகளுடன் இயக்கப்பட்டது. இது பொதுமக்களின் தேவையும் அவசியத்தையும் பிரதிபலிக்கிறது. இந்த சேவை பெங்களூரு- ஷிமோகா மற்றும் பிற நகரங்களுக்கு செல்லும் மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலாளர்களுக்கு சுமுகமான பயணத்தை எளிதாக்கியது. மென்பொருள் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உதவியாக அமைந்தது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறுத்தப்பட்டு விட்டது. இது பயணிகளிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இந்த சிறப்பு ரெயிலை பண்டிகை காலங்கள் தொடர்ந்து வருவதால் மேலும் 3 மாதங்களுக்கு தொடர்ந்து இயக்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






