கொலை மிரட்டல் வழக்கில் சீமானுக்கு சம்மன்

கொலை மிரட்டல் வழக்கில் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவை அருகே வில்லியனூரில் கடந்த 23-ந்தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது தொலைகாட்சி செய்தியாளருக்கும், சீமானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் செய்தியாளரை தகாத வார்த்தைகளால் திட்டி சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வில்லியனூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 2 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சம்பந்தமாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் முத்தியால்பேட்டையை சேர்ந்த சுந்தரபாண்டி, கடலூரை சேர்ந்த செல்வம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள் இருவரும் நேற்று வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி, விளக்கம் அளித்தனர். இந்த வழக்கில் வருகிற 8-ந்தேதி ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.






