சென்னையில் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது


சென்னையில் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது
x

சென்னையில் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக, சென்னையில் நேற்று முன்தினம் பள்ளிக்கல்வி இயக்குனரக அலுவலகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று 2-வது நாளாக சென்னையில் கூடிய அவர்கள் எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர். அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றி திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் 3-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போராட்டத்தை கைவிட போலீசார் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்து ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் கைதை கண்டித்து ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில் திருவாரூர் மாவட்டம் கோட்டூரை சேர்ந்த ஆசிரியர் பாலமுரளி மயக்கம் அடைந்தார். அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

1 More update

Next Story