சேலம்: காருவள்ளி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா


சேலம்: காருவள்ளி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
x

காருவள்ளி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ஓமலூர் எம்எல்ஏ மணி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சேலம்

ஓமலூர் அடுத்த காருவள்ளியில் சின்ன திருப்பதி என்று அழைக்கப்படும் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி மற்றும் பத்மாவதி தாயார் அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் ஆழ்வார்கள் சன்னதி புனரமைக்கப்பட்டது. விமானம் மற்றும் மதில் சுவர்கள் சீரமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் கோவில் அடிவாரத்தில் இருந்து புனித நீர் மற்றும் முளைப்பாரி அழைத்து வருதல் நடைபெற்றது. மாலையில் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.

29ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு மங்கல இசை, தெய்வத்திடம் அனுமதி பெறுதல், குருமார்களிடம் அனுமதி பெறுதல், முளைப்பாரி இடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, இன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகர லக்னத்தில் கோவில் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த புனித நன்னீராட்டு விழாவில் தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், ஓமலூர் எம்எல்ஏ மணி மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து அன்னதானமும், மாலை 3 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாட்டினை இந்து சமய அறநிலைத்துறை மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

1 More update

Next Story