சேலம் பட்டாசு வெடி விபத்து; எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சேலம் பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா 27 ஆண்டுகளுக்குப்பின் நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.
விழாவின்போது நேற்று சாமி திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான சீர் வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு சென்றபோது பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது, பைக்கில் மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசு மீது தீப்பொறி விழுந்தது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் செல்வராஜ் (வயது 29), தமிழ்செல்வன் (வயது 11), கார்த்தி (வயது 11) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி உயிரிழந்தனர். படுகாயங்களுடன் பலர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், லோகேஷ் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சேலம் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் ,
கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும் , முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது. எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உரிய ஆவன செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.