திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணியிடம் ரூ.60 லட்சம் கொள்ளை

கொள்ளை சம்பவம் தொடர்பாக, போலீஸ்காரர்கள் உள்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி,
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வளையம்பட்டி அருள்நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜான் கென்னடி (வயது 32). இவர் தனது உறவினர் கொடுத்த ரூ.60 லட்சத்தை எடுத்துக்கொண்டு கடந்த மாதம் 30-ந் தேதி சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி வந்தார். ரெயிலில் இருந்து இறங்கிய அவர் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரை 2 பேர் வழிமறித்தனர். அவர்கள் தங்களை சிறப்பு போலீஸ் என்று கூறி ஆரோக்கிய ஜான்கென்னடியிடம் இருந்து பணப்பையை பறித்துக்கொண்டு சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து ஜங்ஷன் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் திருச்சி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும், ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அப்போது பணம் பறித்த சம்பவம் உண்மை என்பதும், இந்த சம்பவத்தில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 4 பேர் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து திருச்சி ரெயில்வே போலீஸ்காரர்களான ஜான்சன் கிரிஸ்டோகுமார்(43), தீனதயாள்(37) மற்றும் திருவெறும்பூரை சேர்ந்த ரஞ்சித்(40), ராஜேந்திரன்(45) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.






