ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மிக பயணம்... நாகை, மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட பக்தர்கள்


நாகை, மயிலாடுதுறையில் இருந்து ஆன்மிக பயணத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ள, ஏழை எளிய முதியோர்களுக்காக ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மிக சுற்றுலா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மண்டலம் வாரியாக இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அவ்வகையில் 2025-2026-ம் ஆண்டின் ஆன்மிக சுற்றுலாவிற்காக நாகை மண்டலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று பயணத்தை தொடங்கினர். இந்து சமய அறநிலைத்துறை நாகை மண்டல இணை ஆணையர் குமரேசன் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். நாகை மண்டலத்தில் நாகை, திருவாரூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 30 பக்தர்கள் பயணம் செய்கின்றனர்.

இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பக்தர்களின் ஆன்மிக பயண தொடக்க நிகழ்ச்சியும் இன்று நடந்தது. மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட யாத்திரையை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இன்று புறப்பட்ட பக்தர்கள் வேன் மூலம் ராமேஸ்வரம் வரை அழைத்து செல்லப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து ரெயிலில் காசிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story