மழையால் விளைச்சல் பாதிப்பு.. காய்கறி விலை மேலும் உயர்வு


மழையால் விளைச்சல் பாதிப்பு.. காய்கறி விலை மேலும் உயர்வு
x

ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.140-க்கும், தக்காளி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நெல்லை,

விளைச்சல் பாதிப்பு

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவரமாக பெய்து வந்தது. சமீபத்தில் உருவான ‘தித்வா’ புயல் காரணமாக நெல்லை மாவட்டத்தில் இடைவிடாது மழை பெய்தது.

தொடர் மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதம் அடைந்தன. மேலும் காய்கறி விளைச்சலும் பாதிக்கப்பட்டது. இதனால் சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து கணிசமாக குறைந்து விட்டது.

காய்கறிகள் விலை உயர்வு

இதையொட்டி காய்கறிகளின் விலை திடீரென்று உயர்ந்து உள்ளது. திருமண முகூர்த்த நாள் உள்ளிட்ட காரணங்களால் காய்கறிகளின் நுகர்வு அதிகரித்து உள்ளது. இதனால் வெள்ளை கத்தரிக்காய் விலை உயர்ந்து கடந்த வாரம் கிலோ ரூ.120-க்கு விற்றது. இந்த நிலையில் நேற்று மேலும் ரூ.20 உயர்ந்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது. சந்தைகள் மற்றும் கடைகளில் வெள்ளை கத்தரிக்காய் கிடைக்கவில்லை. பச்சை, நீல நிற கத்தரிக்காய் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தது.

இதுதவிர தக்காளி விலை ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெண்டைக்காய் விலையும் கிலோ ரூ.80 ஆக உயர்ந்தது. சின்ன வெங்காயம் ரூ.50 முதல் ரூ.75 வரையிலும், பல்லாரி ரூ.25 முதல் ரூ30 வரை தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டது. தேங்காய் விலை சற்று குறைந்து ரூ.65 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது. ஊட்டி கேரட் விலையும் சற்று உயர்ந்து கிலோ ரூ.60-க்கு விற்பனை ஆனது. உருளைக்கிழங்கு விலையில் மாற்றம் இன்றி ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது. முட்டைக்கோஸ் ரூ.40, பீட்ரூட் ரூ.40 விலையில் விற்பனை செய்யப்பட்டது. வருகிற பொங்கல் பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story