வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ராதாபுரம் பகுதியில் வீடு புகுந்து தம்பதியை கத்தியைக் காட்டி மிரட்டி, 4 சவரன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே பல்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சாமி (வயது 70). இவருடைய மனைவி சொர்ணம்(65). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். எனவே சாமி-சொர்ணம் தம்பதியர் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நமபர்கள் நேற்று முன்தினம் அதிகாலையில் சாமியின் வீட்டுக்குள் நைசாக புகுந்தனர்.
அங்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சாமி-சொர்ணம் தம்பதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, சொர்ணம் அணிந்திருந்த 4 சவரன் நகைகளை பறித்தனர். மேலும் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்து தப்பி சென்றனர். கொள்ளையர்கள் சென்றதும் தம்பதியர் கூச்சலிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் இருளில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.






