பாமகவின் தேர்தல் கூட்டணி குறித்து 30-ந் தேதி அறிவிக்கப்படும்: ராமதாஸ்

பாமகவின் தேர்தல் கூட்டணி குறித்து 30-ந் தேதி அறிவிக்கப்படும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
பா.ம.க. கட்சியில் தற்போது பிளவு ஏற்பட்டு, நிர்வாகிகளுக்கு இடையே பிரச்சினைகள் எழுந்துள்ளன. அக்கட்சியின் நிறுவனர் - தலைவர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் சில நிர்வாகிகளும், கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தரப்பில் மற்ற நிர்வாகிகளுமாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் தீரன், பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர், அருள் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர், அன்பழகன், மாநில நிர்வாகிகள், கட்சி அமைப்பு ரீதியாக உள்ள 108 மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தலைவாசலில் டிசம்பர் 30-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டணி குறித்து பொதுக்குழுவில் ஆலோசிக்க உள்ளோம். பொதுக்குழுவில் கட்சியின் நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசை கண்டித்து டிச.12-ந்தேதி மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






