சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு சாகும்வரை சிறை - நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி களம்புது தெருவைச் சேர்ந்தவர் ஜகுபர் உசேன் (56 வயது). கூலி தொழிலாளியான இவர் நெல்லை அருகே உள்ள பர்கிட்மாநகர் பகுதியில் தங்கி இருந்து வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு 17 வயது சிறுமியான பள்ளி மாணவி ஒருவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட ஊரக அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் ஜகுபர் உசேன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளி ஜகுபர் உசேனுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜரானார்.