கூட்டணியில் இருந்து விலக நயினாரே காரணம் - டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்கவே முடியாது என டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சிவகங்கை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறக் காரணம் நயினார் நாகேந்திரன். அவர் உள்ளொன்று வைத்துக்கொண்டு வெளியில் வேறு விதமாக பேசுகிறார். பழனிசாமி போதும் என்று நினைக்கிறார். பழனிசாமியை தூக்கிப்பிடிப்பதே நான் விலகக் காரணம். அகங்காரத்துடன், ஆணவத்துடன் நயினார் நாகேந்திரன் செயல்பட்டார். எங்களை தூக்கவே அவர் திட்டமிட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் என்னை முன்பு இணைத்தது பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை. அவர் எனக்கு நல்ல நண்பர். அண்ணாமலை நடுநிலையோடு செயல்பட்டார்.
தமிழ்நாட்டின் இன்றைய மனநிலை நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் பேசத்தயார் என மனமின்றி நயினார் நாகேந்திரன் கூறுகிறார். எனக்காக தேனி தொகுதியை விட்டுக்கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவருக்காக நான் பேசாமல் வேறு யார் பேசுவார்கள்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யார் மீதும் எனக்கு கோபமும், வருத்தமும் இல்லை. துரோகம் செய்த பழனிசாமி, எங்களை சந்திக்கவே தயங்குகிறார். அவரை முதல்-அமைச்சர் வேட்பாளராக எங்களால் ஏற்க முடியாது. பழனிசாமியை எதிர்த்து ஆரம்பித்ததுதான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். விரைவில் செங்கோட்டையனை சந்திப்பேன். நீங்கள் நினைக்காத கூட்டணி ஒன்று அமைய போகிறது. நாங்கள் இருக்கும் கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற போகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு பின் அதிமுக பின்னடைவை சந்திக்கும்."
இவ்வாறு அவர் பேசினார்.