நாகர்கோவில்: துணியை சரியாக தைக்காததால் டெய்லர் படுகொலை - அதிர்ச்சி சம்பவம்

நாகர்கோவில் அருகே துணியை சரியாக தைக்காததால் டெய்லர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே துணியை சரியாக தைக்காததால் டெய்லர் கத்தரிக்கோலால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு அருகே டெய்லர் கடை நடத்தி வந்தவர் செல்வம். இவர் நேற்று மாலை அவருடைய கடையில் தலை, காது உள்ளிட்ட பகுதிகளில் கத்தரிக்கோலால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடினர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்திரமணி என்ற நபர் அங்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், "சந்திரமணி பேண்ட் ஒன்றை திருத்துவதற்காக செல்வத்திடம் கொடுத்துள்ளார்.
ஆனால் அதை சரியாக செல்வம் தைக்கவில்லை என்று கூறி, நேற்று மாலை சந்திரமணி அவரிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்திரமணி, அங்கிருந்த கத்தரிக்கோலால் செல்வத்தை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்" என்று தெரிய வந்துள்ளது.