முகூர்த்த தினம்.. 30-க்கும் மேற்பட்ட திருமணம்.. களைகட்டிய திருச்செந்தூர் கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை தினத்தையொட்டி நேற்று பக்தர்கள் குவிந்தனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் முருகன் கோவில்
திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழா, விடுமுறை, பண்டிகை மற்றும் சுபமுகூர்த்தம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. விடுமுறை தினமான நேற்று திரளான பக்தர்கள் அதிகாலை முதலே திருச்செந்தூரில் குவிந்தனர்.
3 மணி நேரம் காத்திருப்பு
அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். பின்னர் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்றனர். அங்கு சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தற்போது சபரிமலைக்கு மாலையணிந்து செல்லும் அய்யப்ப பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கோவில் வளாகத்தில் நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
30-க்கும் மேற்பட்ட திருமணம்
சுபமுகூர்த்த தினங்களில் திருச்செந்தூர் கோவிலில் வைத்து திருமணம் செய்வதில் பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்றும் சுபமுகூர்த்த தினம் என்பதால் ஏராளமான மணமக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வந்திருந்தனர். சண்முக விலாச மண்டபம் மற்றும் கோவில் வளாகங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால் கோவில் வளாகத்தில் மணக்கோலத்தில் மணமக்கள் அதிகளவில் தென்பட்டனர்.






