எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்


எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
x
தினத்தந்தி 26 Nov 2025 11:58 AM IST (Updated: 26 Nov 2025 12:01 PM IST)
t-max-icont-min-icon

சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

சென்னை,

அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வனத்துறை, போக்குவரத்து துறை, வேளாண்மை துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, வருவாய் துறை என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக அவர் செயல்பட்டு வந்த நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கோரிக்கை வைத்த நிலையில், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அவர் பிறகு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அமைதி காத்து வந்த கே.ஏ.செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளார். நாளை (வியாழக்கிழமை) சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகம் செல்லும் அவர், விஜய் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைய இருக்கிறார்.

இந்த நிலையில், இன்று காலை 11.45 மணிக்கு சென்னை தலைமைச்செயலகம் வந்த கே.ஏ.செங்கோட்டையன், சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். ஏற்கனவே, ஆலங்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்துவிட்டு, தி.மு.க.வில் இணைந்த நிலையில், தற்போது கே.ஏ.செங்கோட்டையனும் ராஜினாமா செய்துள்ளார்.

1 More update

Next Story