கோவையில் ரூ.208 கோடியில் செம்மொழி பூங்கா: மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்


கோவையில் ரூ.208 கோடியில் செம்மொழி பூங்கா: மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
x

கோவையில் தொழில்முனைவோர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடுகிறார்.

கோவை,

கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி கோவை காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் 165 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. 2021-ம் ஆண்டு தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் செம்மொழி பூங்கா திட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது.

முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208½ கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது. இந்த பணிகளை கடந்த 2023-ம் ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தற்போது அந்த பணிகள் நிறைவடைந்து உள்ளன.

இதைத்தொடர்ந்து கோவை மக்களின் பொழுதுபோக்கு தலமாக விளங்க உள்ள செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கிறார். இதற்காக அவர் இன்று காலை 10.05 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு 11.15 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு வருகிறார். கோவை விமான நிலையத்துக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

வரவேற்பு முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் 11.45 மணிக்கு காந்திபுரம் வருகிறார். பின்னர் செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தொடர்ந்து செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள செம்மொழி வனம், மூலிகை தோட்டம், புதிர்தோட்டம், ஆரோக்கிய வனம், நீர்வனம், பாறை வனம், பூஞ்சோலை, மலைக்குன்று உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் பார்வையிடுகிறார். பின்னர் அங்கு உள்ள நீர்வீழ்ச்சி அரங்கில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளையும் கண்டுரசிக்கிறார்.

பின்னர் செம்மொழி பூங்காவில் உள்ள ஆடிட்டோரியத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் கோவையை சேர்ந்த தொழில் அதிபர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் என முக்கிய பிரமுகர்கள் 150 பேருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். இதனை முடித்துவிட்டு அவர், காரில் புறப்பட்டு மதியம் 1 மணிக்கு கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

இதைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் அங்கு தமிழ்நாடு தொழில்துறை சார்பில் டி.என்.ரைசிங் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அப்போது அவரது முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளது. முதல்-அமைச்சர் கோவை வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

1 More update

Next Story