கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 குளங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு


கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 குளங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
x

24.50 கோடி லிட்டர் மழை நீரை சேர்த்து வைக்ககூடிய அளவுக்கு 6 குளங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

டிட்வா புயல் மழையினை முன்னிட்டு, அடையாறு மண்டலம், கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 குளங்களில் நீர் நிறைந்துள்ளதை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது;-

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 45 ஏக்கர் பரப்பளவில் கோவை மாவட்டத்தில் செம்மொழி பூங்கா ஒன்றினை திறந்து வைத்து, அந்த செம்மொழி பூங்கா இன்றைக்கு கோவை மாவட்டத்திற்கு ஒரு மிக பெரிய அளவிலான புகழை சேர்க்கும் வண்ணம் ஒரு பூங்காவாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகைகளில் சென்னையை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு 160.86 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. இந்த 160.86 ஏக்கர் பரப்பளவில் 118 ஏக்கர் நிலபரப்பிளான ஒரு சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடங்கிவைத்த நிலையில், அந்த பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. இங்கே நாற்று பண்ணைகள் திறந்துவைக்கப்பட்டு மக்களுக்கு விநியோக மையம் ஒன்றும் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 118 ஏக்கர் நிலபரப்பிலான சுற்றுச்சூழல் பூங்காவில் ஒரு மிக சிறந்த வகையில் புதிதாக 4 குளங்கள் வெட்டி மழைநீர் சேமிக்கின்ற அளவுக்கு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஏற்கேனவே இந்த மைதானத்தில் 2 குளங்கள் இருந்தன. அந்த 2 பெரிய குளங்கள் இன்றைக்கு தூர்வாரி ஆழமாக்கப்பட்டு அகல படுத்தப்பட்டுள்ளன. அதோடு மட்டும் அல்லாது புதிய 4 குளங்கள் வெட்டி சீரமைக்கப்பட்டுள்ளன.

24.50 கோடி லிட்டர் மழை நீரை சேர்த்து வைக்ககூடிய அளவுக்கு இன்றைக்கு 6 குளங்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதோடு மட்டும் அல்லாது அருகில் வேளச்சேரி பெருங்குடி சாலையில் ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்றி ஆறு வழி நீர் பாதை (Six Vent) ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கே இருந்த உபரி நிலங்களில் ஒரு 3.50 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு பெரிய குளங்கள் வெட்டப்பட்டன.

அந்த குளங்களை பொருத்தவரை இன்றைக்கு 4.25 கோடி லிட்டர் மழைநீர் தேக்கி வைக்கும் அளவிற்கு அங்கே குளங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டுள்ளன. ஆக கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அமையபெற்றுள்ள இந்த 12 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகியிருக்கிற 6 குளங்களில் 24.50 கோடி மழைநீரை சேமிக்க முடியும். வேளச்சேரியில் 3.50 ஏக்கர் நிலப்பரப்பில் வெட்டப்பட்டுள்ள குளங்களில் 4.25 கோடி லிட்டர் மழைநீரை சேமித்து வைக்க முடியும். ஆக ஒட்டு மொத்தமாக 28.75 கோடி லிட்டர் மழைநீரை சேமித்து வைக்க கூடிய குளங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

வடகிழக்கு பருவமழை 17.10.2025 அன்று தொடங்கி இன்று காலை 10 மணி வரை 54.8 செ.மீ அளவுக்கு பொழிந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 01.12.2025 முதல் 04.12.2025 காலை 10 மணி வரை ஏறத்தாழ 25.4 செ.மீ மழை பொழிந்துள்ளது. அதிகமான மழை பொழிந்துள்ள நிலையிலும் வெள்ள பாதிப்புகள், போக்குவரத்து பாதிப்புகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படாத நிலை உள்ளதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவியல் பூர்வமாக எடுத்த நடவடிக்கைகளும், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் மேற்கொண்ட ஆய்வுகளுமே காரணமாகும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story