பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனைக்கான மருத்துவ வாகன சேவை விரைவில் தொடக்கம் - மா.சுப்பிரமணியன்


பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனைக்கான மருத்துவ வாகன சேவை விரைவில் தொடக்கம் - மா.சுப்பிரமணியன்
x

38 மாவட்டங்களுக்கும் 38 வாகனங்கள் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று (09.11.2025) சென்னை, அன்னை வேளாங்கன்னி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ், தென்சென்னை மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 125க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 259 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000/-அரசு சேமிப்பு பத்திரங்கள் மற்றும் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியைச் சார்ந்த 118 இளம் பெண்களுக்கு அதிகபட்சமாக தலா ரூ.50,000/-வரையிலான காசோலைகளை வழங்கினார். பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் இன்றைக்கு மிக சிறப்பான வகையில் பயன்பெற்று வருகிறது. முதல்-அமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை பெண் சிசுக்கொலையை தடுப்பது, குழந்தை திருமணத்தை தடுப்பது மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி பெண் கரு மற்றும் சிசு கொலைகளை தடுத்தல், குழந்தை திருமணங்களை தடுத்தல், நிதி பாதுகாப்பை மேம்படுத்துதல், பெண் கல்வியை மேம்படுத்துதல், ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்குகளை மாற்றுதல், சிறு குடும்ப முறையை ஊக்குவித்தல், குழந்தை பாலின விகிதத்தை உயர்த்துதல் போன்றவைகள் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் இந்த திட்டத்தின் பலனை பொதுமக்களுக்கு மிகப் பெரிய அளவில் சென்றடைய வேண்டும் என்கின்ற வகையில் கடந்த 4 ஆண்டுகளாக இதற்கு முன்பு இந்த திட்டத்தில் பயன்பெறுபவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.72,000/- என்று இருந்ததை மாற்றி தற்போது ரூ.1,20,000/- என்று உயர்த்தி இருக்கிறார்கள். அதேபோல் கருத்தடை செய்பவர்களின் வயது 40 என்று இருந்ததை 49 வயது என்று உயர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் இந்த திட்டத்தில் ஏராளமான பேர் பயன்பெறுகிறார்கள்.

தமிழ்நாடு முதல்-அமைச்சருன் வழிகாட்டுதலின்படி, பெண் குழந்தைகளுக்கென்று பாதுகாப்பு திட்டங்கள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், காலை உணவுத் திட்டம் என்று திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழ்நாடு முதல்-அமைச்சரால் விரைவில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் (Womens wellness) என்கின்ற வகையில் வாகனச் சேவை விரைவில் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. மகளிர்கள் 100 சதவீதம் அனைவரும் புற்றுநோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளாக கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் என்று ஏறத்தாழ 8 வகையான புற்றுநோய் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதற்கு முழுமையான பரிசோதனைகள் செய்யக்கூடிய ஒரு திட்டம், வாகனங்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி முழு பரிசோதனை வசதிகளுடன் கூடிய அந்த வாகனம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன்முறையாக அந்த திட்டம் இங்கு செயல்படுத்தப்படவிருக்கிறது. 38 மாவட்டங்களுக்கும் 38 வாகனங்கள் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் 10 நாட்களில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்படவிருக்கிறது. அதேபோல் முதல்-அமைச்சர் பெண் குழந்தைகளை பாதுகாத்திடும் வகையில் 2025-26ஆம் நிதி ஆண்டில் ரூ.36 கோடி செலவில் 14 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு HPV (Human Papilloma Virus) வைரஸ் என்று சொல்லக்கூடிய கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி பெண் குழந்தைகளுக்கு செலுத்த தொடங்கப்படவிருக்கிறது.

தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிகளுக்கு அதிகம் செலவு ஆகும். ஆனால் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடுவதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரால் இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படவிருக்கிறது. ஆக பெண் குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தென்சென்னை மாவட்டத்தில் மட்டும் 118 பெண் குழந்தைகளுக்கு அதாவது 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000/- வரை ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதோடுமட்டுமல்லாமல் 259 குழந்தைகளை பயனாளிகளாக தேர்வு செய்து அவர்களுக்கு சேமிப்பு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆக 259 பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு பத்திரமும், 118 பேருக்கு முதிர்வுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதோடுமட்டுமல்லாமல் குறைந்த வயதில் திருமணம் செய்துக் கொள்ளும் பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்குரிய உறுதிமொழியும் அதற்கு எதிராக கையெழுத்து பிரசாரமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா, மண்டலக்குழுத்தலைவர் துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் மோகன்குமார் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story