பணப்பிரச்சினையில் முதியவரை கொடுங்காயம் ஏற்படுமாறு தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலியில் பணப்பிரச்சினை காரணமாக பழவூர் பகுதியைச் சேர்ந்த முதியவரை, அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் அசிங்கமாக பேசி கொடுங்காயம் ஏற்படுமாறு தாக்கியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், பழவூர் அருகே கடந்த 2015-ம் ஆண்டு பணப்பிரச்சினை காரணமாக, பிள்ளையார் குடியிருப்பைச் சேர்ந்த ராஜபூபதி (வயது 75) என்பவரை, அதே ஊரைச் சேர்ந்த முத்துகுட்டி(57) என்பவர் அசிங்கமாக பேசி கொடுங்காயம் ஏற்படுமாறு தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது வள்ளியூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முத்துக்குட்டி(57) மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, குற்றவியல் நடுவர் மோசஸ் ேநற்று (25.11.2025) குற்றவாளிக்கு தண்டனை வழங்கினார்.
தண்டனை விபரம் பின்வருமாறு:
IPC 326-ன்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம், IPC 506(ii)-ன்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை, மேலும் மேற்சொன்ன தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், பழவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாராம், இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஆலன்ராயன் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.






