வாகன விபத்தில் இறப்பு ஏற்படுத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், சிப்காட் அருகே அலங்காரப்பேரியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் வாகன விபத்தில் உயிரிழந்தனர்.
கடந்த 2021-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் காவல் நிலைய சரகம், சிப்காட் அருகே அலங்காரப்பேரியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் வாகன விபத்தில் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய கோவில்பட்டியை சேர்ந்த ராஜேஷ் (வயது 34) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி மூன்றாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் குற்றவாளியான ராஜேஷ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, குற்றவியல் நடுவர் ஜெயசங்கரகுமாரி இன்று (20.11.25) குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த திருநெல்வேலி உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா, கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி, இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் (தற்போது பணவடலி சத்திரம் காவல் நிலையம்), குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஏஞ்சல் செல்வராணி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.






