மார்பிங் படத்தை மாணவிக்கு அனுப்பி காதல் தொல்லை; வாலிபர் கைது

மார்பிங் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக வாலிபர் மிரட்டி உள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த முருங்கபட்டியை சேர்ந்தவர் அப்பிச்சிகுமார் (வயது 19). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு பள்ளியில் படித்தபோது ஒரு மாணவியுடன் பழகி வந்துள்ளார். அதைத் தொடர்ந்து இருவரும் காதலித்ததாக தெரிகிறது. அப்போது அந்த மாணவி சக தோழியுடன் உள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அப்பிச்சிகுமாருக்கு பகிர்ந்ததாக தெரிகிறது.
அந்த புகைப்படத்தை மார்பிங் செய்து மாணவி புகைப்படத்துடன் அப்பிச்சிகுமார் புகைப்படத்தை இணைத்து ( கணவன்-மனைவி போல்) மாணவிக்கு அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அப்பிச்சிகுமாரை விட்டு விலகி உள்ளார். ஆனால் அப்பிச்சிக்குமார் மாணவியை காதலிக்க வற்புறுத்தி வந்ததுடன் மார்பிங் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த மாணவி இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.அதன் பேரில் உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பிச்சிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.