இதுவரை 33,418 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது - சென்னை மாநகராட்சி தகவல்

இன்று மட்டும் 7 மையங்களில் 3,091 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் செல்லப்பிராணிக்களுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும் விரைவுபடுத்தவும், இதன்மூலம் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதாக தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெற்றுக் கொள்வதற்காகவும் மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை (ஆன்லைன் போர்டல்) மேயரால் 03.10.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பதிவு செய்யும் உரிமையாளர்களுக்கு செல்லப் பிராணிகளுக்கான உரிமை பதிவு செய்தல், வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி நாய்களுக்கு செலுத்துதல் மற்றும் மைக்ரோப்சிப்பிங் பொருத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
இன்றுடன் 23.11.2025 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் செல்லப்பிராணிகள் உரிமையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட 23.11.2025 என்ற காலக்கெடுவானது, 07.12.2025 வரை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
அவ்வாறாக, இன்று (23.11.2025) திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களிலும், சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுபாட்டு மையத்திலும், என மொத்தம் 7 மையங்களில் 3,091 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தி செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. இதுநாள்வரை 77,707 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 33,418 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






