பெருகும் தொழில் நிறுவனங்கள்; அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள் - கோவையில் நில மதிப்பு 3 மடங்கு உயர்வு

கோவையில் தொழில் நிறுவனங்கள் பெருகி வருகின்றன.
கோவை,
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் மாநகரமாக கோவை உள்ளது. இங்கு ஐ.டி. தொழில் மையங்கள், மோட்டார் பம்பு தொழிற்சாலைகள், பவுண்டரிகள், மின்னணு வாகன தொழிற்சாலைகள் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. அங்கு வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.
இது தவிர கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள், உணவு நிறுவனங்களும் அதிகளவில் உள்ளன. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலை கட்டிடங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் கட்டுமான தொழிலும் லாபகரமாக இயங்கி வருகிறது. அதற்கு ஏற்ப 2-ம் நிலை நகரமான கோவையில் நில மதிப்பும் உயர்ந்து வருகிறது.
மாநகருக்குள் நில மதிப்பு சதுர அடிக்கு குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.18 ஆயிரம் அல்லது அதற்கு மேல் வரை உயர்ந்துள்ளது. இது இருப்பிடத்தை பொறுத்து மாறுபடுகிறது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளுக்குள் கோவையில் நில மதிப்பு 3 மடங்கு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கட்டுமான சங்கத்தினர் கூறியதாவது:-
பெரும்பாலும் வீடு வாங்குபவர்கள் ரூ.75 லட்சத்திற்கும் குறைவான சொத்துக்களின் பட்ஜெட் வகையின் கீழ் வருகிறார்கள். அவினாசி சாலை, காளப்பட்டி, சரவணம்பட்டி மற்றும் கணபதி ஆகியவை புதிய வளரும் பகுதிகளாக கருதப்படுகின்றன.
மேற்கு புறவழிச்சாலை பணி முடிவடைந்தால் மாநகர வளர்ச்சிக்கு மேலும் உதவிகரமாக அமையும். கிழக்கு புறவழிச்சாலை அமைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பணிகள் தாமதமாகி வருகிறது.
ரூ.70 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை வீடுகள் விற்பனையாகி வருகிறது. அவினாசி ரோடு பகுதிகளில் டாக்டர்கள், பேராசிரியர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
விமான நிலைய விரிவாக்கம், தனியார் ஐ.டி. பூங்கா முதலீடுகள், தொழில்துறை கிடங்குகள், சூலூரில் அமைக்கப்படும் தொழில்துறை பூங்கா உள்ளிட்டவை நிலத்தின் மதிப்பை மேலும் உயர்த்தி உள்ளன. 2 படுக்கை அறை கொண்ட வீட்டின் சொத்து மதிப்பு ரூ.80 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நில மதிப்பில் கோவை ரேஸ்கோர்ஸ் முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரு சதுர அடிக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை செலவாகும். அதைத்தொடர்ந்து ஆர்.எஸ்.புரத்தில் ரூ.13 ஆயிரம் மற்றும் அதற்கு மேலும் உள்ளது. அவினாசி ரோடு பகுதியில் குறிப்பாக பீளமேடு, ஹோப் கல்லூரி, நவ இந்தியா ஆகிய இடங்களில் பல நிறுவனங்கள் இருப்பதால் அப்பகுதிகள் வளர்ந்து வருவதுடன் நிலத்தின் மதிப்பும் உயர்ந்து வருகிறது.






