திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு


திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு
x
தினத்தந்தி 4 Dec 2025 5:59 PM IST (Updated: 4 Dec 2025 6:27 PM IST)
t-max-icont-min-icon

உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றாத அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கூறியதாவது: எனது உத்தரவால் யாருக்கும் பாதிப்பு இல்லை. நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளீர்கள். கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக நடந்து இருக்கலாம் எனக்கூறினார்.அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுபபுங்கள். சட்டப்படி 4 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றார். அதற்கு நீதிபதி, 4 வாரம் பதில் கொடுத்தால் என்ன செய்வீர்கள் என கேட்க, அதற்கு சட்டப்படி உரிய பதில் அளிப்போம் என தமிழக அரசு வழக்கறிஞர் கூறினார். அப்போது நீதிபதி கூறுகையில், “ நீதிமன்றத்துக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும்” என்றார்.

நீதிமன்ற உத்தரவுப்படி, காணொலி வாயிலாக ஆஜரான போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.அதற்கு போலீஸ் கமிஷனர், பேரிகார்டுகளை அமைத்து மாலை 3: 30 மணி முதல் நடவடிக்கை எடுத்தோம். கூட்டம் அதிகமாகி பிரச்னை வந்ததால், சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு கலெக்டர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் என்றார்.அதற்கு நீதிபதி எப்போது கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது என கேட்க, அதற்கு போலீஸ் கமிஷனர் 5: 30 மணியளவில் பரிந்துரை செய்தோம் எனத் தெரிவித்தார்.

அரசு தரப்பில், எங்களது நோக்கம் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக்கூடாது. மதிக்கக்கூடாது என்பதல்ல. பதற்றமான சூழலை கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீஸ் கமிஷனரை பாராட்ட வேண்டும். யாருக்கும் காயம் ஏற்படாத வகையில் அவர் செயல்பட்டார்” என்று கூறப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கூறியதாவது: மனுதாரர் சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் மலைக்கு செல்லும் போது போலீஸ் கமிஷனர் தடுத்துள்ளார். 144 தடை உத்தரவு இருப்பதால் மேலே செல்ல முடியாது எனக்கூறியுள்ளார். அதாவது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாது எனக்கூறியுள்ளார். அதனால், உத்தரவு நிறைவேற்ற முடியவில்லை. மாவட்ட கலெக்டர், நீதிமன்றத்தை விட தான் பெரியவர் என நினைத்துள்ளார். திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இன்று மாலை 6: 30 மணிக்குள் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு போலீஸ் கமிஷனர் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டதற்கான அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும்” என்று தனது உத்தரவில் கூறினார் உத்தரவை நிறைவேற்ற தவறினால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 More update

Next Story