கும்பகோணம் அருகே 2 வீடுகளின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

கும்பகோணம் அருகே 2 வீடுகளின் கதவை உடைத்து 4¾ பவுன் நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40) விவசாயி. கடந்த 30-ந் தேதி தனது குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று அதிகாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் வீட்டின் அறையில் சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு கிடந்தது. அதில் பார்த்த போது பீரோவில் இருந்த ¾ பவுன் நகையும் ரூ.1 லட்சமும் திருட்டு போயிருந்தது.
இதேபோல் கீழகருப்பூர் பகுதியை சோ்ந்த மோகன் (42). விவசாயியான இவர், தனது குழந்தைகளின் படிப்பிற்காக அம்மாசத்திரம் பகுதியில் குடும்பத்தினருடன் தங்கி உள்ளார். கீழகருப்பூர் பகுதியில் உள்ள வயலில் விவசாய பணிகளுக்கு அடிக்கடி சொந்த வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று கீழகருப்பூர் பகுதியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன் வீட்டிற்கு உள்ளே அறையில் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் வீட்டில் இருந்த சுமார் 1 கிலோ வெள்ளிப்பொருட்களையும் காணவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் போலீசார், திருட்டு நடந்த வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.