பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் உண்டா? இல்லையா? - வெளியான முக்கிய தகவல்


பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் உண்டா? இல்லையா? - வெளியான முக்கிய தகவல்
x

கோப்புப்படம் 

2026 பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.

சென்னை

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.

அதன்பிறகு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த திமுக, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணத்தை வழங்கியது. ஆனால், கடந்த ஆண்டு (2025) பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தார்கள்.

இந்த நிலையில், 2026 பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்காக இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தகவல் தெரிவித்தது.

இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு மட்டும்தானா, ரொக்கப் பணம் கிடையாதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

ரூ.248 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது பச்சரிசி, சர்க்கரை, கரும்பு கொள்முதல் செய்வதற்காகத்தான். இதற்கு முன்கூட்டியே பணம் ஒதுக்கி கொடுத்தால்தான் பொருளை பெற முடியும். ஆனால், ரொக்கப் பணம் எவ்வளவு என்பதை நிதித் துறையுடன் முதல்-அமைச்சர் கலந்துபேசி அறிவிப்பு வெளியிட்டால் போதுமானது. பணத்தை உடனடியாக பெற்று ரேஷன் கடைகளுக்கு வழங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

எனவே, பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணம் வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது. ரூ.2 ஆயிரம் வழங்கலாமா? அல்லது ரூ.3 ஆயிரம் வழங்கலாமா?, நிதி எவ்வளவு தேவைப்படுகிறது? என்று அரசு கணக்கிட்டு வருகிறது. இன்றோ, நாளையோ ரொக்கப் பணம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட வாய்ப்பு அதிகம் இருப்பதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story