சமூகநீதி குறித்து தெரியாத ஒருவர் இளம் பெரியாரா? - ஆதவ் அர்ஜுனா கேள்வி

மக்களிடம் இருந்து விஜய்யை பிரிக்க முடியாது என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
ஈரோடு,
ஈரோட்டில் நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
அண்ணன் செங்கோட்டையன் வந்த பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிவிட்டது. இந்த ஈரோடு மக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் எல்லாம் தங்களுடைய வாழ்க்கையை நடத்துவதற்கு இந்த ஆட்சியின் ஊழலால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இங்கிருக்கக்கூடிய அமைச்சர்கள் டாஸ்மாக்கை மட்டும் நடத்தக் கூடிய நிர்வாகத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.இதை மாற்ற முடியுமானால், அதை தவெகவால் தான் மாற்ற முடியும்.
சமீபத்தில் இளைஞர் மாநாடு போல் ஒன்றை நடத்தினார்கள். அதில் இளைஞர்களே இருக்கமாட்டார்கள். ஆனால் அப்பா- மகன் என இரண்டு இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள்… இளம் பெரியாராம்... யாருப்பா இளம் பெரியார்… பெரியாரின் வரலாறு தெரியுமா… பெரியாருக்கு ஸ்பெல்லிங் தெரியுமா?.
இதே ஈரோட்டு மண்ணில் எத்தனை சொற்பொழிவுகள், எத்தனை மாநாடு, எத்தனை உழைப்பு… 70 வருட உழைப்பு, அந்த உழைப்பையெல்லாம் சிதைக்கும் வகையில் இளம் பெரியார் என்று சொல்கிறீர்கள். பெரியாரை அவமானப்படுத்தும்போது திராவிடர் கழகம் என்ன செய்துகொண்டிருக்கிறது.
5 வருடங்களுக்கு முன்னால் உங்கள் மகன் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது, சமூக நீதியென்றால் என்னவென்று கேட்டார். அப்படிபட்டவர் இளம்பெரியாரா?. யாருங்க இங்கே இளம் பெரியார். பெரியார் போன்ற தலைவர் இன்னும் உருவாகவில்லை. எதிர்காலத்திலும் உருவாக முடியாது. சமூகநீதி குறித்து தெரியாத ஒருவர் இளம் பெரியாரா?.
ஒரே பெரியார், ஒரே தீரன் சின்னமலை, ஒரே அம்பேத்கார், ஒரே காமராஜர் தான். இந்த தலைவர்களை நீங்கள் அசிங்கப்படுத்தினால் தவெக போராட்டத்தில் குதிக்கும். 2026, 2031 என நாங்கள் போய்க்கொண்டே இருப்போம். மக்களிடம் இருந்து விஜய்யை பிரிக்க பார்த்தார்கள். ஆனால் இந்த மக்கள் சக்தி, பெண்கள் சக்தி எந்தளவுக்கு விஜய் மீது அன்பையும், நம்பிக்கையையும் வைத்திருக்கிறது. இந்த சக்தியை யாராலும் பிரிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.






