விஜய்யின் வாக்குறுதிகளான வீடு, மோட்டார் சைக்கிள் வழங்குவது சாத்தியமா?

நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
சென்னை,
பிரபல நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் களம் காண இருக்கிறது. அதை முன்னிட்டு, நடிகர் விஜய் நடத்தி வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
ஆளுங்கட்சியான தி.மு.க.வும், ஆண்ட கட்சியான அ.தி.மு.க.வும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யோ, சாத்தியமான திட்டங்களை மட்டுமே மக்களுக்காக நிறைவேற்றுவோம் என்று அதிரடியாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் மரணம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தாமல் இருந்து வந்த விஜய், காஞ்சீபுரத்தில் நேற்று மீண்டும் தொடங்கினார். ஆனால், இது சாலையில் நடைபெறாமல், 2 ஆயிரம் பேருக்கு மத்தியில் கூட்ட அரங்கத்திலேயே நடைபெற்றது.
ஆனால், இந்த கூட்டத்தில் பேசிய விஜய், வழக்கத்துக்கு மாறாக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார். அனைவருக்கும் வீடு, அனைத்து குடும்பங்களுக்கும் மோட்டார் சைக்கிள் என்று அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தினார். ஆளுங்கட்சியுடனும், ஆண்ட கட்சியுடனும் மோத வேண்டும் என்றால், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டால்தான் முடியும் என்று அவரும் நினைத்துவிட்டார் போலும்.
இனி இந்த கவர்ச்சிகரமான அறிவிப்புகளை செயல்படுத்துவது சாத்தியமா? என்பதைப் பற்றி பார்ப்போம். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி 1967-ம் ஆண்டு இருந்தது வரை மாநில அரசுக்கு கடன் என்று எதுவும் இல்லை. ஆனால், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று, அதாவது திராவிட கட்சிகளின் ஆட்சியில்தான் கடன் வாங்கத் தொடங்கினார்கள். அந்தக்கடன் பல்கிப்பெருகி இன்றைக்கு ரூ.10 லட்சம் கோடியை கடந்துவிட்டது. 2025-2026-ம் நிதியாண்டு இறுதியில் தமிழகத்தின் கடன் அளவு ரூ.15 லட்சம் கோடியை கடக்கும் என்று கூறப்படுகிறது.
புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு கடன் வாங்கலாம். ஆனால், தேர்தலின்போது மக்களிடம் வாக்குகளை பெற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அதை நிறைவேற்றுவதற்காகவே அதிக கடன் வாங்க வேண்டியுள்ளது.
தி.மு.க. ஆட்சியில் 2006-ம் ஆண்டு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கொடுக்கப்பட்டது. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இப்படி கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியான ஆண்டுகளிலேயே அதிக அளவு கடனும் பெறப்பட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இப்போது, அதே பாணியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதை நிறைவேற்றுவது எந்த அளவில் சாத்தியம், அதற்கான நிதி எங்கிருந்து கிடைக்கும் என்பதை எல்லாம் அவர் இன்னும் விளக்கவில்லை. எது எப்படியோ, ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்காக அரசியல் தலைவர்கள் நம்ப முடியாத வாக்குறுதிகளை எல்லாம் அளிக்கிறார்கள். அவ்வாறு அறிவிக்கும்போது, அதற்கான நிதியை எவ்வாறு தேடிக்கொள்வோம் என்பதையும் அரசியல் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






