அனைவரும் ஓரணியில் இருந்தால், டெல்லி அணியின் காவி திட்டம் பலிக்காது: மு.க.ஸ்டாலின் பேச்சு

முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு நிச்சயம் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளையபெருமாள் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் கலந்துகொண்டு பேசியதாவது;
"மக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று சேவையை வழங்கவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் முகாமில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். தகுதி இருந்தும் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் முகாம்களில் வந்து விண்ணப்பித்தால் போதும். முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயம் கிடைக்கும்
திராவிட மாடல் அரசுக்கு துணையாக கூட்டணி கட்சியின் தலைவர்கள் உள்ளனர். மார்க்ஸிய, அம்பேத்கர் இயக்க தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதுதான் ஓரணியில் தமிழ்நாடு. தமிழ்நாடு ஓரணியில் இங்கு இருக்கும்போது எந்த டெல்லி அணியின் காவித் திட்டமும் பலிக்காது.
ஆதி திராவிட, பழங்குடியின மக்களுக்கு அதிக திட்டங்களை தந்தது திமுக அரசு. அரசின் சமூக சீர்திருத்த திட்டங்களுக்கு கூட்டணி கட்சிகள் துணையாக இருக்கின்றன. தமிழ்நாடு வரலாற்றிலேயே பட்டியலின மக்களுக்கு அதிக திட்டங்கள் வழங்கியுள்ளோம். சமூக நீதி பயணம் நீண்ட நெடியது. அதற்கு காலம் தேவைப்படும். எல்லாம் மாறும்.. மாற்றுவேன்."
இவ்வாறு அவர் பேசினார்.