பிரிந்து சென்ற மனைவியை கொலை செய்து சடலத்துடன் செல்பி எடுத்த கணவன்


பிரிந்து சென்ற மனைவியை கொலை செய்து சடலத்துடன் செல்பி எடுத்த கணவன்
x

பாலமுருகன் தனது மனைவியின் சடலத்துடன் செல்பி புகைப்படம் எடுத்து, அதனை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

கோவை,

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அருகே உள்ள தருவை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா(வயது 28). இவருக்கும் பாலமுருகன்(வயது 32) என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பாலமுருகனிடம் இருந்து பிரிந்து வந்து ஸ்ரீபிரியா கோவை மாவட்டத்திற்கு சென்று, தனியார் விடுதியில் தங்கி அங்குள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அவர்களது குழந்தைகளை ஸ்ரீபிரியாவின் தாய் கவனித்து வருகிறார். இந்நிலையில், தனது மனைவியை பார்ப்பதற்காக கோவையில் ஸ்ரீபிரியா தங்கியிருந்த மகளிர் விடுதிக்கு பாலமுருகன் சென்றுள்ளார். விடுதியின் வாசலில் காத்திருந்த அவர், ஸ்ரீபிரியா வெளியே வந்தபோது அவரிடம் பேசியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் தன்னிடம் இருந்த அரிவாளால் ஸ்ரீபிரியாவை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஸ்ரீபிரியா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். ஆனால் பாலமுருகன் தனது மனைவியின் சடலத்துடன் செல்பி புகைப்படம் எடுத்து, அதனை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து போலீசார் அங்கு வந்து சேர்ந்தனர். அதுவரை பாலமுருகன் அதே இடத்தில் இருந்துள்ளார்.

பின்னர் போலீசார், ஸ்ரீபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பாலமுருகனை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகளிர் விடுதியில் தங்கியிருந்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story