வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க எத்தனை லட்சம் பேர் விண்ணப்பம்? வெளியான புதிய தகவல்


வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க எத்தனை லட்சம் பேர் விண்ணப்பம்? வெளியான புதிய தகவல்
x

photo Credit: PTI

தினத்தந்தி 28 Dec 2025 5:47 PM IST (Updated: 28 Dec 2025 6:07 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 77 லட்சம் ஆண் வாக்காளர்களும், 2 கோடியே 66 லட்சம் பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்பட 10 மாநிலங்கள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களில் கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) தொடங்கின.இந்தப் பணிகள் இம்மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி முடிவடைய இருந்த நிலையில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், படிவங்களை பூர்த்தி செய்து வழங்க 2 முறை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 19-ந் தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்களில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன.தற்போதைய நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. மொத்த வாக்காளர்களில் 15.18 சதவீதம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 77 லட்சம் ஆண் வாக்காளர்களும், 2 கோடியே 66 லட்சம் பெண் வாக்காளர்களும் உள்ளனர். இறந்த வாக்காளர்கள் 26 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் ஆவார்கள். முகவரி இல்லாதவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேரும், இரட்டைப் பதிவு செய்தோர் 3 லட்சத்து 39 ஆயிரத்து 278 பேரும் ஆவார்கள்.

இதில், இறந்தவர்கள் பெயரிலும், இரட்டைப் பதிவு கொண்டோரும் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது. அதே நேரத்தில், முகவரி மாற்றத்தால் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அவர்களின் பெயர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு அளிக்கும் வகையில் ஜனவரி 18-ந் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோன்று விண்ணப்பிப்பவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து உறுமொழி படிவம் ஒன்றையும் கொடுக்க வேண்டும். நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க 4 லட்சத்து 42 ஆயிரத்து 70 பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்க 4 ஆயிரத்து 741 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தப் பணிகள் அனைத்தும் ஜனவரி 18-ந் தேதி முடிவடைந்த பிறகு, அனைத்தும் சரிபார்க்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ந் தேதி வெளியிடப்படுகிறது. அதில் இடம்பெறும் வாக்காளர்களே சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியும்.

1 More update

Next Story