சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை
ஆவடியில் பலத்த காற்று வீசிய நிலையில், விளம்பரப் பதாகை கிழிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சென்னை,
கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக சென்னையில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டு இருள் சூழ்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னை எழும்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, பரங்கிமலை, அசோக் நகர், மதுரவாயல், கோயம்பேடு, மாதவரம், ஆவடி, புழல், தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, பல்லாவரம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஆவடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ஆவடியில் மழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.ஆவடியில் பலத்த காற்று வீசி வரும் நிலையில், விளம்பரப் பதாகை கிழிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சென்னையில் சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. சென்னையில் பிற்பகல் ஒரு மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை போலவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.