அனுமன் ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்


அனுமன் ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்
x

வெள்ளிவாயல்சாவடி, நல்லாட்டூர் வீரமங்கலம், பள்ளிப்பட்டு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

பல்வேறு மாவட்டங்களில் நடந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேய பெருமானை வழிப்பட்டனர்.

திருத்தணி,

மார்கழி மாத அமாவசை மற்றும் மூலநட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நேற்று திருத்தணி அடுத்த நல்லாட்டூர் கிராமத்தில் உள்ள வீரமங்கள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

இதில் மூலவர் ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி, செந்தூரம் வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு காப்புகள் அணிவிக்கப்பட்டது. முன்னதாக லட்சார்ச்சனை, மகா கணபதி ஹோமம் நடந்தது. மங்கள வாத்தியங்களுடன் சுவாமி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் நீராடினார். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேய பெருமானை வழிப்பட்டனர்.

கே.ஜி.கண்டிகையில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள, 35 அடி உயரமுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

பள்ளிப்பட்டு ஆஞ்சநேயர் நகரில் உள்ள வீர மங்கள ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு வீரமங்கள ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வீரமங்கள ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.

மீஞ்சூரில்

மீஞ்சூர் அடுத்த வெள்ளிவாயல்சாவடி கிராமத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் தனி சன்னதியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு நேற்று காலை திருமஞ்சனம் 108 கலச அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது. இதைதொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயர், பெருமாளுக்கு வடமாலை சாத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமியை தரிசனம் செய்தனர். இதைபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனுமன் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

73 ஆயிரம் வடைமாலை

கடம்பத்தூர் ஒன்றியம் திருப்பந்தியூர் கிராமத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 73 ஆயிரத்து ஒன்னு வடைமாலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் பெரிய குப்பம் ஸ்ரீதேவி மீனாட்சி நகர் பகுதியில் உள்ள 32 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது.

1 More update

Next Story