கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க தடை


கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க தடை
x

கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை வேளச்சேரி ஏரி வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் ஏரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பான விவகாரத்தை சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணை தலைவர் குமாரதாசன் தாக்கல் செய்த மனுவையும் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, 'கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் 118 ஏக்கர் இடத்தில் ஏரியை உருவாக்க முடியும். இதனால் மழை பாதிப்பில் இருந்து வேளச்சேரியை பாதுகாக்கலாம். ஆனால், 118 ஏக்கர் நிலம், பசுமை பூங்கா அமைக்க தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏன் ஏரி அமைக்கக்கூடாது? என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.

இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

இதைத்தொடர்ந்து தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பசுமை பூங்காவை மேம்படுத்துவதற்காக அந்த நிலம் சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை. வருவாய்த்துறை மூலமோ அல்லது தோட்டக்கலை துறை மூலமோ இந்த நிலம் முறையாக தங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்துள்ளார்.

எப்படியிருந்தாலும், ஏற்கனவே தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தபடி தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் இருந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக்கூடாது. வழக்கு விசாரணை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story