கிராண்ட் சுவிஸ் செஸ்: தமிழக வீராங்கனை வைஷாலி ‘சாம்பியன்’ - மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் தமிழக வீராங்கனை வைஷாலி மீண்டும் ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.
சென்னை,
‘பிடே’ கிராண்ட் சுவிஸ் செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடந்து வந்தது. இதில் பெண்கள் பிரிவில் இன்று நடந்த 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் ஆர்.வைஷாலி 43-வது காய் நகர்த்தலில் முன்னாள் உலக சாம்பியன் சீனாவின் டான் ஜோங்ஜியுடன் ‘டிரா’ செய்தார்.
11-வது சுற்று முடிவில் தமிழகத்தை சேர்ந்த வைஷாலியும் (6 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வி) ரஷியாவின் கேத்ரினோ லாக்னோவும் (5 வெற்றி, 6 டிரா) தலா 8 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தனர். இருப்பினும் அதிக வெற்றி அடிப்படையில் வைஷாலி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். அத்துடன் அடுத்த ஆண்டு நடக்கும் 8 வீராங்கனைகள் இடையிலான கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
2-வது இடத்தை பிடித்த கேத்ரினோ லாக்னோவும் கேண்டிடேட்ஸ் இடத்தை உறுதி செய்தார். கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற 3-வது இந்திய வீராங்கனை வைஷாலி ஆவார். ஏற்கனவே கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக்கும் தகுதி பெற்று இருக்கிறார்கள். கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெறும் வீராங்கனை தான், உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
“உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற பிடே கிராண்ட் செஸ் தொடரில் தனது நிதானத்தாலும் அபார ஆட்டத்தாலும் வென்று, வெற்றி மகுடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள 'நம்ம சென்னைப் பொண்ணு' வைஷாலிக்கு எனது பாராட்டுகள். இதன் மூலம் அவர் பெருமதிப்பு கொண்ட கேண்டிடேட்ஸ் (பெண்கள் பிரிவு) தொடருக்கும் தகுதிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது வைஷாலியின் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, சென்னையின் வெற்றி, தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வெற்றி! இதைப் பார்த்து, உலக அரங்கில் நம்மாலும் நமது கனவுகளை நனவாக அரங்கேற்ற முடியும் என ஊக்கம் பெறும் எண்ணற்ற இளம்பெண்களின் வெற்றி” என்று தெரிவித்துள்ளார்.