அரசு முதியோர் இல்லம்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவை நிறுத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்டு


அரசு முதியோர் இல்லம்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவை நிறுத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்டு
x

அனைத்து மாவட்டங்களிலும் ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுங்கள் என்று அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

புதுடெல்லி,

கடந்த 2024-25 நிதியாண்டில் முதியோர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும், அனைத்து மாவட்டங்களிலும் அரசு முதியோர் இல்லங்கள் இல்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்களை அமைக்க வேண்டும் என ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக தூத்துக்குடியை சேர்ந்த அதிசயகுமார், மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கோவில் வளாகங்கள் பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் பலர் ஆங்காங்கே நடைமேடை உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவின்றி தங்கி உள்ளனர்.

இவர்களை பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009-ன் படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டம் தோறும் ஆதரவற்ற முதியோர் காப்பகம் அமைத்து பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை, சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தப்பட வேண்டும். ஆனால் ஒரு இல்லம் கூட அரசால் நடத்தப்படவில்லை. தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இது விதிமீறும் செயல். ஏற்கத்தக்கதல்ல. ஆகவே அனைத்து மாவட்டங்களிலும் ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுங்கள் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் வக்கீல் ஜி.இந்திரா மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு முதியோர் இல்லத்தை கட்டமைக்கும் பணியை 6 மாதங்களுக்குள் தொடங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்ததுடன், மூல மனுதாரர் அதிசயகுமார் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 29-ந் தேதிக்கு தள்ளி வைத்தது.

1 More update

Next Story