கொரோனா காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்குக - ஓ.பன்னீர்செல்வம்

கோப்புப்படம்
கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் பணியில் இருந்தபோது கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்களின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 54 மாதங்கள் கடந்து, ஆட்சியின் ஆயுட்காலமே முடிவுக்கு வரவுள்ள நிலையிலும், உரிய இழப்பீடு வழங்கப்படாத அவல நிலை நீடிக்கிறது. ஒருவேளை வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதுதான் திராவிட மாடல் அரசு போலும்.
வாக்குறுதியைதான் நிறைவேற்றவில்லை என்றால், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள விதியையாவது பின்பற்றுகிறதா என்றால் அதுவும் இல்லை. அதாவது, தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி பணியில் இறந்துபோன அரசு ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவது அரசாங்கத்தின் கடமை. அப்படி இருக்கையில், கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில், தங்கள் உயிரை துச்சமென மதித்து, பொதுமக்களுக்காக சேவை புரிந்து, அதன் காரணமாக தொற்று ஏற்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் இதர அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை இன்னமும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், கொரோனா தொற்றின்போது பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்ட நிலையில், அரசு மருத்துவர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து மக்களுக்காக பணியாற்றினர். இவ்வாறு பணியாற்றிய மருத்துவர்களில், அரசு மருத்துவர் விவேகானந்தன் என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து மறைந்த மருத்துவர் விவேகானந்தன் அவர்களின் மனைவி கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குமாறு கோரியிருந்தார். அரசாங்கத்திடம் பலமுறை முறையிட்டும் பலன் இல்லாத நிலையில் சென்னை ஐகோர்ட்டில் அரசு வேலை தர உத்தரவிடுமாறு மனுத் தாக்கல் செய்தார். இவரது மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு அவருக்கு கருணை அடிப்படையில் வேலை அளிக்க உத்தரவிட்டது. இருப்பினும், இதுநாள் வரை மறைந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படவில்லை.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்காத தி.மு.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க.வின் மனிதாபிமானமற்ற செயலுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் பணியில் இருந்தபோது உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவி உள்பட பணியில் இருந்தபோது இறந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






