சிறுமிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் அதிரடி கைது

திருச்செந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பூவரசூர் பகுதியைச் சேர்ந்தவர் மிகாவேல் (28 வயது). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருச்செந்தூர் மற்றும் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இவர் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் சொந்த ஊருக்கு வந்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு ஆறுமுகநேரியில் மிகாவேல் பணியாற்றியபோது 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று முன்தினம் மிகாவேலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.