‘யூடியூப்’ பார்த்து கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு.. பட்டதாரி வாலிபர் செயலால் அதிர்ச்சி

‘யூடியூப்’ பார்த்து கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடித்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அழகாபுரிபட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (வயது 26). இவர் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக ஆலங்குளம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தனிப்பிரிவு போலீசார், மணிகண்ட பிரபு வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு ஒரு அறையில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையிலும், அதற்கு ஜெராக்ஸ் எந்திரம் பயன்படுத்தியதும் தெரியவந்தது. தொடர்ந்து அங்கிருந்த மணிகண்ட பிரபுவை பிடித்து ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதாவது, பி.ஏ. பட்டதாரியான மணிகண்ட பிரபு கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன் சமூகவலைதளம் மூலம் ஆர்டர் செய்து கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை வாங்கினார். அதில் பிரிண்ட் அவுட் எடுப்பது தொடர்பான பணிகளை பகுதி நேரமாக செய்து வந்தார்.
இதுதவிர தென்காசியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வரும் போது இரவு நேரங்களில் தனது செல்போனில் ‘யூடியூப்’ வீடியோக்களை பார்த்து வந்தார். அதைபார்த்து தனது அறையில் வைத்திருந்த ஜெராக்ஸ் எந்திரத்தில் 500, 200 ரூபாய் நோட்டுகளை அப்படியே ஸ்கேன் செய்து கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளரூபாய் நோட்டுகளாக புழக்கத்தில் விட்டு உள்ளார்.
மருந்துக்கடை, டீக்கடை போன்ற கடைகளில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதற்கு துணையாக அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர் செயல்பட்டு உள்ளனர். மேற்கண்ட தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்ட பிரபுவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் போலீசார் அடைந்தனர். இதுதவிர மணிகண்ட பிரபுவிடம் இருந்து கள்ள ரூபாய் நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்திய கலர் ஜெராக்ஸ் எந்திரம், பிரிண்ட் அவுட் பேப்பர்கள், கலர் ஜெராக்ஸ் மூலம் எடுக்கப்பட்ட 500, 200 ரூபாய் கள்ளநோட்டுகள் போன்றவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.