மின்சார வாகனங்களுக்கான சாலை வரிச்சலுகை நீட்டிப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது.
சென்னை,
தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
மின்சார வாகனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வரி விலக்கு சலுகையானது இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில், இந்த 100 சதவீதம் வரி விலக்கானது வருகிற ஜனவரி 1-ந்தேதி (நாளை) முதல் 2027-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.
இந்த வரி விலக்கு சலுகையானது, மத்திய மோட்டார் வாகன விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான போக்குவரத்து வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் என அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும்.
தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது. 2025-ம் ஆண்டில் இது சுமார் 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த வேகத்தைத் தக்கவைக்கவும், ‘தமிழ்நாடு மின்சார வாகனக்கொள்கை 2023'-ன் நோக்கங்களை எட்டவும், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் போக்குவரத்து ஆணையரின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் மின்சார வாகனங்களை வாங்குவோர் சாலை வரி செலுத்துவதில் இருந்து முழுமையாக விலக்கு பெறுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






