கல்வி உரிமைப் போராளி முனைவர் வே.வசந்தி தேவி மறைவு - முத்தரசன் இரங்கல்


கல்வி உரிமைப் போராளி முனைவர் வே.வசந்தி தேவி மறைவு - முத்தரசன் இரங்கல்
x
தினத்தந்தி 1 Aug 2025 6:45 PM IST (Updated: 1 Aug 2025 6:48 PM IST)
t-max-icont-min-icon

வே.வசந்தி தேவி மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ் நாட்டின் தலைசிறந்த கல்வியாளரும், போராளியுமான முனைவர் வே.வசந்தி தேவி (87) இன்று காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். முனைவர் வசந்தி தேவி நாட்டுப்பற்றுக் கொண்ட குடும்ப வழி வந்தவர். திண்டுக்கல் நகரத்தில் பிறந்தவர். அங்கு பள்ளிக் கல்வியை முடித்து, உயர் கல்வி பெறுவதற்கு சென்னை வந்தவர்.

தேச விடுதலைப் போராட்ட வீரரும், தொழிலாளர்கள் நலன் காக்க முதன் முதலாக தொழிற்சங்கத்தை நிறுவிய முன்னோடிகளில் முதன்மையாக விளங்கியவருமான தியாகி சர்க்கரை செட்டியார் மகள் வழி வாரிசான முனைவர் வே.வசந்தி தேவி, கல்லூரி துணைப் பேராசிரியர் தொடங்கி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றியது வரை உயர் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்து, மேம்படுத்தியவர். இடதுசாரி இயக்கங்களின் இயல்பான தோழமை உறவில் இறுதி வரை இருந்தவர். அடித்தட்டு மக்களின் அழைப்பை மறுக்காமல் ஏற்று, அவர்களது நிகழ்வுகளில் பங்கேற்று ஆதரவு காட்டியவர்.

கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் முதல் பட்டியலின மக்கள், பழங்குடியினர், பெண்கள் என யார் பாதிக்கப்பட்டாலும் அதற்கு எதிராக போர்க் குரல் எழுப்பியவர். களமிறங்கி போராடி வந்தவர். தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவராக பணியாற்றியவர்.

சாதி, மத வெறுப்பும், பிளவுகளும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் இல்லாத சமூக சமத்துவ சிந்தனைகளை எழுத்துக்களிலும், பேச்சிலும் தொடர்ந்து விதைத்து வந்தவர்.

அரசியலமைப்பு சட்டமும், ஜனநாயக நெறிகளும் வகுப்புவாத, பாசிச தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பேராபத்தான சூழலில், மதச்சார்பற்ற ஜனநாயக பாதுகாப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த வசந்தி தேவியின் மறைவு, ஜனநாயக சக்திகளுக்கு பேரிழப்பாகும்.

அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது..வருத்தத்துடன், என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story