திமுக ஆட்சியையும், தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் பிரிக்க முடியாது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியைவிட இரண்டரை மடங்கு அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவை,
தமிழக பொருளாதாரத்தில் கோவை மாவட்டம் முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது . தொழில் நகரான கோவை தற்போது கல்வி, மருத்துவம், சுற்றுலா, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் புகழ் பெற்று விளங்குகிறது.
கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுதவிர தொழில்துறையில் சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்திற்கு மேலும் பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த 2021 நவம்பர் 23-ந் தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டில் ரூ.34,723 கோடி முதலீட்டில் 74 ஆயிரத்து 835 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் இன்று கோவை - அவினாசி சாலை யில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழ்நாடு தொழில்துறை சார்பில் 3-வது தமிழ்நாடு வளர்கிறது (டி.என்.ரைசிங்) முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
அமைச்சர் முன்னிலையில் இந்த மாநாட்டில் முதல் ரூ.43 ஆயிரத்து 844 கோடி முதலீட்டில் புதிய தொழில்க ளுக்கான 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம் 1 லட்சத்து 709 இளைஞர்களுக்கு
வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் இதன் மூலம் கோவை மண்டலம் தொழில்துறையில் சிறந்து விளங்கும் என்றும் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்தனர். இந்த மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.
கோவையில் நடைபெறும் டி.என்.ரைசிங் முதலீட்டாளர்கள் மாநாடு 2025 நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றியதாவது:-
ஜி.டி.நாயுடு, பொள்ளாச்சி மகாலிங்கம் போன்றோர் புது முயற்சிகளுக்கு பெயர் பெற்றவர்கள். கோவை மக்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். அரசின் ஆதரவு எப்போதும் தொழில் துறையினருக்கு உண்டு.
தென் இந்தியாவின் மான்செஸ்டராக கோவை மாவட்டம் விளங்குகிறது. தென் இந்தியாவின் மான்சென்ஸ்டர் கோவைக்கு முதல்-அமைச்சரான பின் 15-க்கும் மேற்பட்ட முறை வந்துள்ளேன். கோவை மக்களுக்காக தொடர்ந்து உழைப்போம்.
ரூ.43,844 கோடி முதலீட்டில் 1,00,709 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 158 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. தூத்துக்குடியில் ரூ.32,000 கோடிக்கும் ஒசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.24,000 கோடிக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
25 ஆண்டுகள் முன்கூட்டியே தொலைநோக்குடன் சிந்தித்து செயலாற்றி வருகிறோம். திமுக ஆட்சியையும் தமிழக வளர்ச்சியையும் பிரிக்க முடியாது. இந்தியாவில் முதல் முறையாக 1997-ல் ஐடி. கொள்கையை கொண்டு வந்தது திமுக அரசு தான். கோவை மக்களுக்காக தொடர்ந்து உழைப்போம். ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு நானே சென்று தொழில் முதலீட்டை ஈர்த்தேன். தமிழ்நாடு முழுவதும் சீரான வளர்ச்சி என்ற இலக்குடன் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இந்த முதலீட்டாளர் மாநாடு வளர்ச்சிக்கான தொடக்கம் மட்டும்தான். தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் திட்டங்களுக்கு எந்த தாமதமும் ஏற்படாது. தமிழ்நாட்டில் தொழில், முதலீடுகள் செய்ய உகந்த சூழல், அரசு வெளைப்படை தன்மையுடன் செயல்படுகிறது.
கடந்த ஆட்சியில் 62,000 நிறுவனங்கள் இருந்த நிலையில் திமுக ஆட்சியில் 72 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியைவிட இரண்டரை மடங்கு அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.
2021ல் திமுக ஆட்சிக்கு வரும் போது 62,413 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருந்தன. தற்போது 79,185 ஆக உயர்ந்துள்ளது. 41/2 ஆண்டுகளில் 29.69 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக மத்திய அரசின் PF பி.எப் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளோட போட்டி போட்டு முதலீடுகளை கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டுக்கு கிடைத்த முதலீடுகளை தாங்கிக்கொள்ள முடியாத சிலர் பொய் செய்திகளை பரப்புகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 12,663 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை, சூலூர், பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்காக்கள் அமைக்கப்படும்.தமிழ்நாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.






