2026 சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. மெகா கூட்டணி; எதிர்க்கட்சிகள் வியூகம் வகுப்பது எப்படி?

அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கும் என்பதால், இன்று மோதலாக இருப்பது தேர்தல் சமயத்தில் இணக்கமாக மாற வாய்ப்புள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்களே இருக்கின்றன. அரசியல் கட்சிகளுக்கும் இப்போதே தேர்தல் ஜூரம் அடிக்கத் தொடங்கிவிட்டது வெளிப்படையாக தெரிகிறது. ஆளுங்கட்சியான தி.மு.க. புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதிலும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்துவதிலும் வேகம் காட்டத் தொடங்கிவிட்டன.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவைகளுடன் மெகா கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்தித்தது. தேர்தலில் வெற்றியும் பெற்று ஆட்சி அமைத்தது.
பிறகு, 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது இந்தக் கூட்டணியில் கூடுதலாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் ஒட்டிக்கொண்டது. எனவே, 2026 சட்டசபை தேர்தலிலும் இதே மெகா கூட்டணியுடன் களம் கண்டால் போதும் என்று தி.மு.க. தலைமை கருதுகிறது.
கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 173, காங்கிரஸ் 25, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் தலா 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலா 3, மனிதநேய மக்கள் கட்சி 1, 4 சிறு கட்சிகளுக்கு தலா 1 இடம் என்று 234 தொகுதிகளும் பங்கிடப்பட்டன. இந்த முறை புதிய வரவான மக்கள் நீதி மய்யத்துக்கு 2 இடங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. எனவே, தொகுதி பங்கீட்டில் தி.மு.க. கூட்டணியில் எந்த சிக்கலும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில், 2026 சட்டசபை தேர்தலில் முதல்முறையாக அடியெடுத்து வைக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தையும் புறம்தள்ளிவிட முடியாது. பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள நடிகர் விஜய் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கட்சி தொடங்கிய பிறகு, விக்கிரவாண்டியில் நடத்திய முதல் மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், "எங்கள் கூட்டணிக்கு வருவோரை சேர்த்துக்கொள்வோம். ஆட்சியிலும் பங்கு தருவோம்" என்று பரபரப்பை ஏற்படுத்தினார். 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிட்டால் 15 முதல் 20 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணக்கிட்டு கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில், கடந்த மாதம் வெளியிடப்பட்ட மற்றொரு கருத்து கணிப்பில், தி.மு.க. கூட்டணிக்கு செல்வாக்கு அதிகரித்து 47-ல் இருந்து 52 ஆக வாக்கு சதவீதம் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே கருத்துக்கணிப்பில், அ.தி.மு.க. வாக்கு வங்கி 23 சதவீதத்தில் இருந்து 20 ஆக குறையும் என்றும், பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் 18-ல் இருந்து 21 ஆக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தி.மு.க., பா.ஜ.க.வின் வளர்ச்சியையும், அ.தி.மு.க.வின் தளர்ச்சியையும் காட்டுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "2026 சட்டசபை தேர்தலில் எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க.தான்" என்று கூறினார்.
இதனால், கடந்த சட்டசபை தேர்தலைப் போல் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே மீண்டும் கூட்டணி மலருமோ என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க.வை சீண்டிப்பார்க்கும் வகையில், "கடந்த முறை எங்களால் தோற்றுப்போனதாக சொன்னவர்கள் இன்றைக்கு எங்கள் கூட்டணிக்காக காத்திருக்கிறார்கள்" என்று கருத்து தெரிவித்தது மீண்டும் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியது.
என்றாலும், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க., தமிழக வெற்றிக்கழகம் ஆகிய கட்சிகள் மும்மூர்த்திகளாக கைகோர்த்தால்தான் பலம் கொண்ட தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கும் என்பதால், இன்று மோதலாக இருப்பது தேர்தல் சமயத்தில் காதலாக மாறி இரட்டை இலையில் தாமரை மலருவதற்கான வாய்ப்பு உருவாகும் என்றும் அவர்கள் யூகிக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அசுர பலத்துடன் இருந்த பா.ஜ.க.வை எதிர்கொள்ள காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து பிரமாண்டமான 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியது. அதன் மூலம் பா.ஜ.க.வின் வெற்றியை தடுக்க முடியாவிட்டாலும், மெஜாரிட்டி பெறுவதை தடுக்க முடிந்தது. அதுபோன்ற ஒரு நிலை தமிழகத்தில் ஏற்பட்டால் தி.மு.க. கூட்டணியும் ஆட்டம் காணும் நிலை ஏற்படும்