2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அரசு அகற்றப்படும்: பா.ம.க. அரசியல் தீர்மானத்தில் உறுதி


2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அரசு அகற்றப்படும்: பா.ம.க. அரசியல் தீர்மானத்தில் உறுதி
x
தினத்தந்தி 9 Aug 2025 2:05 PM IST (Updated: 9 Aug 2025 5:38 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வை வீழ்த்த உறுதியேற்பது, வன்னியர் இடதுக்கீடு தரவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் உள்பட 19 தீர்மானங்கள் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

செங்கல்பட்டு,

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று காலை தொடங்கி நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் தி.மு.க.வை வீழ்த்த உறுதியேற்பது, வன்னியர் இடதுக்கீடு தரவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோன்று, பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. அதில், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் அனைத்து தரப்பு மக்களாலும் மிகவும் வெறுக்கப்படும் ஆட்சி என்றால் அது தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சிதான் என்பதே அனைத்து தரப்பினரின் பொதுக்கருத்தாக உள்ளது. அந்த அளவுக்கு அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. அரசால் அனைத்து வகைகளிலும் மிக கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு வீட்டு வரி முதலில் 175% வரையிலும், அதன்பின் ஆண்டுதோறும் 6% வரையிலும் உயர்த்தப்பட்டு வருகிறது. குடிநீர் வரிகள் அளவே இல்லாமல் அதிகரிக்கப்பட்டுள்ளன. மின்சார கட்டணம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.45,000 கோடி அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பால் விலையை குறைப்பது போன்று நாடகமாடிய தி.மு.க. அரசு, மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பால் வகைகள் அனைத்தின் உற்பத்தியையும் குறைத்து விட்டு, அதிக விலை கொண்ட பால் வகைகளை அறிமுகம் செய்து அவற்றைதான் மக்கள் வாங்கியாக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. அரிசி, காய்கறி தொடங்கி அனைத்து வகையான அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டுள்ளன. மக்கள் நலன் காக்கும் அரசு என்ற வகையில், இந்த அநியாய விலையேற்றத்தை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

சட்டம் மற்றும் ஒழுங்குதான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை தமிழகத்தில் 7 ஆயிரம் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமான சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கி கிராமங்கள் வரை எங்கும் குழந்தைகள், மாணவிகள் தொடங்கி மூதாட்டிகள் வரை எவருக்கும் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. காவல்துறையினரே பல இடங்களில் குற்றவாளிகள் கொலை செய்யப்படும் அளவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளது. இவற்றை சரி செய்வதற்கான எந்த முயற்சியையும் அரசு எடுக்கவில்லை.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் வகையில் அனைத்து ஊர்களிலும், அனைத்து தெருக்களிலும் கஞ்சா வணிகம் தலைவிரித்து ஆடுகிறது. சட்டப்படியான மது வணிகம் ஒருபுறம் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், கள்ளச்சாராய வணிகமும் கட்டுப்பாடின்றி தொடர்கிறது. சுமார் ஓராண்டு இடைவெளியில் கள்ளக்குறிச்சி, மரக்காணம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் மட்டும் கள்ளச்சாராயம் குடித்து 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இவ்வளவுக்குப் பிறகும் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் வெள்ளமென பாய்கிறது; அதை காவல்துறை வேடிக்கை பார்க்கிறது.

உழவர்களின் நிலை மிகவும் மோசமடைந்திருக்கிறது. வேளாண் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை; அனைத்து வகையான வேளாண் விளைபொருள்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதை நிறைவேற்றாததால் உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாலைகளில் கொட்டும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. வேளாண்மைக்கு தேவையான பாசன திட்டங்கள், கொள்முதல் செய்யபட்ட நெல் உள்ளிட்ட உணவு தானியங்களை சேமித்து வைப்பதற்கான கட்டமைப்புகள் போதிய அளவில் உருவாக்கப்படாததால் வேளாண்மை சீரழிந்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் வேளாண்துறை வளர்ச்சி மைனஸ் 0.13% என்ற அளவுக்கு வீழ்ச்சியடைந்து இருப்பதிலிருந்தே தி.மு.க. அரசு வேளாண் துறை வளர்ச்சிக்கு சிறு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்பது ஐயமின்றி உறுதியாகிறது.

இளைஞர்களுக்கு அரசு துறையில் 5.50 லட்சம் வேலைவாய்ப்புகளையும், தனியார்துறையில் 50 லட்சம் வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த தி.மு.க. அரசு அதை நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை கொடுத்த தி.மு.க. அரசு, அவை எதையும் நிறைவேற்ற தவறிவிட்டது. கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரி கல்வியின் தரம் குறைந்து வருகிறது. கல்வி பெறும் உரிமை சட்டம் செயல்படுத்தப்படாததால், ஒரு லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறும் வாய்ப்பை இழந்திருப்பது மட்டுமின்றி, ஏற்கெனவே தனியார் பள்ளிகளில் சேர்ந்திருக்கும் 8 லட்சம் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால், இது குறித்தெல்லாம் ஆளும் தி.மு.க. அரசு எந்த கவலையும் படவில்லை.

தமிழ்நாட்டில் தி.மு.க.வின் சில உயர்நிலை தலைவர்களை தவிர வேறு எவரும் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக இல்லை. இந்த ஆட்சி எப்போது அகற்றப்படும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் வினாவாக உள்ளது. இதற்குமுன் தமிழ்நாட்டில் மக்களின் மிக மோசமான எதிர்ப்பையும், வெறுப்பையும் எதிர்கொண்ட அரசுகள் என்றால், 1991 & 1996, 2006 & 2011 காலக்கட்டத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த அரசுகள்தான். இந்த அரசுகளின் பதவிக்காலம் முடிவடைந்தபின் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகளை பார்த்தாலே ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் எந்த அளவுக்கு கொந்தளிப்பில் இருந்தனர் என்பது தெளிவாகும். அந்த இரு ஆட்சிகளையும்விட இன்றைய அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் பெரும் கோபம் கொந்தளிக்கின்றனர். இந்த அரசு அகற்றப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.

மக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது பாட்டாளி மக்கள் கட்சியின் கடமை ஆகும். அந்த கடமையை நிறைவேற்றும் வகையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அரசு அகற்றப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும். அதற்காக திண்ணை பரப்புரை, சமூக ஊடக பரப்புரை, மக்கள் சந்திப்பு இயக்கங்கள், போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் கடுமையாக பாடுபடுவதற்கு பா.ம.க. பொதுக்குழு கூட்டம் உறுதியேற்று கொள்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story