திமுக கள்ள ஓட்டுகளையும், இறந்தவர்களையும் நம்பி இருக்கும் கட்சி: ஜெயக்குமார் விமர்சனம்

எஸ்.ஐ.ஆர். நல்ல நோக்கத்துக்காக கொண்டுவரப்பட்டது என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை,
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் பணியில் படிவங்கள் எவ்வாறு நிரப்ப வேண்டும்? என்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு விண்ணப்ப படிவம் முறையாக வழங்கப்படவில்லை.
சென்னைக்கு மத்திய அரசு சார்பில் தேர்தல் பார்வையாளர்களை நியமித்து பணிகளை கண்காணிக்க வேண்டும். எஸ்.ஐ.ஆர். நல்ல நோக்கத்துக்காக கொண்டுவரப்பட்டது. அதை சிதைக்கும் வேலையை செய்யக்கூடாது. திமுக கள்ள ஓட்டுகளையும், இறந்தவர்களையும் நம்பி இருக்கும் கட்சி. காலம் காலமாக அவர்கள் அந்த வேலையை செய்தவர்கள்.
எஸ்.ஐ.ஆர். வருவதால் இறந்தவர்கள் பெயர் நீக்கப்பட்டுவிடும். ஒருவர் ஒரு ஓட்டு மட்டும்தான் போட முடியும். கள்ள ஓட்டுகள் போட முடியாது. இறந்தவர்கள் திரும்ப வரமுடியாது. தற்போது அது இல்லை என்பதால் திருடனுக்கு தேள் கொட்டியதுபோல உணர்வு இருக்கும். வரும் காலத்தில் தோல்வி உறுதியானதால் வானத்திற்கும், பூமிக்கும் குதிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.






