தீபாவளி ஸ்பெஷல்: அதிரசம், முறுக்கு, ரவா லட்டு எப்படி செய்வது..?


தீபாவளி ஸ்பெஷல்: அதிரசம், முறுக்கு, ரவா லட்டு எப்படி செய்வது..?
x
தினத்தந்தி 16 Oct 2025 12:55 PM IST (Updated: 16 Oct 2025 1:59 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், தமிழகத்தின் பாரம்பரிய பலகாரமான அதிரசம், முறுக்கு, ரவா லட்டு எப்படி செய்வது? என்பதை பற்றி பார்ப்போம்.

தித்திப்பான அதிரசம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கிலோ

வெல்லம் - ¾ கிலோ

ஏலக்காய் - 7 (பொடியாக்கிக்கொள்ளவும்)

கடலை எண்ணெய் - பொறித்து எடுக்க தேவையான அளவு

செய்முறை

முதலில் பச்சரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு, அரிசியை தண்ணீர் போக வடித்து எடுத்து, ஒரு துணியில் ஈரம் போகும் வரை உலர வைக்க வேண்டும். அரிசியை கையில் எடுக்கும்போது ஈரம் ஒட்டக்கூடாது. அதுதான் சரியான பதம் ஆகும்.

இந்த அரிசியை மிக்சி ஜாரில் போட்டு சரசரவென அரைத்து வைத்துக்கொள்ளவும். மற்றொரு பக்கம், வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதனை பாகுவாக காய்ச்சவும். பாகு பதம் எப்படி பார்க்க வேண்டும் என்றால், அதில் ஒரு துளியை எடுத்து தண்ணீரில் சேர்த்தால் அது உருண்டு வர வேண்டும். அந்த பதத்திற்கு பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

காய்ச்சிய வெல்லப் பாகில் மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அதனுடன் ஏலக்காய் பொடியையும் தூவி நன்கு பதம் வரும் வரை கிளறவும். பிறகு, பாகு மாவு நன்கு ஆறியதும் ஒரு எண்ணெய் தடவிய பாத்திரத்தில் வைத்து காற்று போகாதவாறு மூடிவைக்கவும். ஒரு நாட்கள் கழித்து இந்த மாவை எடுக்கவும். சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கையில் வட்ட வடிவமாக தட்டி, நடுவில் துளை போட்டு காய்ந்த எண்ணெய்யில் மிதமான சூட்டில் இருபுறமும் சிவந்து வரும் வரை திருப்பிவிட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான அதிரசம் ரெடி.

மொறு மொறுப்பான முறுக்கு

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கிலோ

உளுந்து (தோல் நீக்கப்பட்டது) - ¼ கிலோ

எள் - 50 கிராம்

பொறி கடலை (உடைத்த கடலை) - ¼ கிலோ

வெண்ணெய் அல்லது டால்டா - 4 ஸ்பூன்

பெருங்காயத்தூள் - ½ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

கடலை எண்ணெய் - 1½ லிட்டர்

செய்முறை

முதலில் பச்சரிசியை நன்கு தண்ணீரில் கழுவி அதை ஒரு துணியில் விரித்து உலர வைக்கவும். பிறகு வெள்ளை உளுந்தை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பிறகு பச்சரிசி, உளுந்து, பொறி கடலை ஆகியவற்றை நன்றாக திரித்துக்கொள்ளவும்.

திரித்த மாவுடன் எள், வெண்ணெய் அல்லது டால்டா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் மாவுடன் தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு பிசைந்து எடுக்கவும். கை விரலை வைத்து அழுத்தினால் எளிதாக விரல் அச்சு பதியவேண்டும். அதுதான் சரியான பதம் ஆகும்.

பிறகு பிசைந்த மாவை முறுக்கு அச்சில் வைத்து வட்டமாக பிழிந்து எடுக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து நன்கு சூடானவுடன் பிழிந்து வைத்த முறுக்கை போட்டு பொன்னிறமாக வந்தவுடன், அதை திருப்பிவிட்டு சற்று நேரத்தில் எடுக்கவும். மொறுமொறுப்பான முறுக்கு ரெடி.

ரசித்து ருசிக்க ரவா லட்டு

தேவையான பொருட்கள்

ரவை - 1 கப்

நெய் - 2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - ¾ கப்

உலர் திராட்சை - ஒரு கை அளவு

முந்திரி - ஒரு கை அளவு

பொடித்த சர்க்கரை - ¾ கப்

ஏலக்காய் - 5 (தூள் ஆக்கியது)

பால் - ¼ கப்

செய்முறை

வடை சட்டியில் முதலில் நெய் சேர்க்கவும். அது உருகி சூடாகியதும் அதில் ரவையை போட்டு நிறம் மாறாமல் வறுக்கவும். அத்துடன் தேங்காய் துருவல், உலர் திராட்சை, முந்திரி (சிறிய துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும்) சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.

பிறகு பொடித்த சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக 2 நிமிடம் கிளறவும். கடைசியாக சூடான பாலை சேர்த்து ஒரு நிமிடம் கலக்கிவிட்டு அடுப்பை அணைக்கவும். சற்று சூடாறியதும் வெதுவெதுப்பான சூட்டில் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். சுவையான ரவா லட்டு ரெடி.

1 More update

Next Story