டிஜிட்டல் கைது; சென்னையை சேர்ந்த மூதாட்டியிடம் ரூ.24 லட்சம் மோசடி - 3 பேர் கைது

டிஜிட்டல் கைது என்ற பெயரில் நாடு முழுவதும் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
சென்னை,
தொழில்நுட்ப வளர்ச்சியால் நமது வாழ்வை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம், தொழில்நுட்ப வளர்ச்சியை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி, அப்பாவி மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் கும்பலும் மற்றொரு புறத்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் 'டிஜிட்டல் கைது' என்ற மோசடி வலையில் சிக்கி பலர் தங்கள் பணத்தையும், நிம்மதியையும் இழந்துள்ளனர். 'டிஜிட்டல் கைது' என்பது, மோசடி கும்பல் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை போல பேசி பொதுமக்களை வீட்டில் சிறை பிடித்து பணம் பறிப்பதாகும். இதுபோன்ற டிஜிட்டல் கைது மோசடிகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், சென்னையை சேர்ந்த மூதாட்டியிடம், டிஜிட்டல் கைது என்ற பெயரில் ரூ.24 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டையை சேர்ந்த 70 வயது மூதாட்டி சித்ரலேகா என்பவர் அளித்த புகாரின்பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி கர்நாடகாவை சேர்ந்த தேஜாஸ், பிரணவ், முகமது சமீர் ஆகியோரை மைசூரில் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.






